சென்னை மாவட்டம் எண்ணூர் முகத்துவாரம் பகுதியைச் சேர்ந்தவர் சதீஷ். இவரது மனைவி சரண்யா. இந்த தம்பதியினருக்கு இரண்டு மகன்கள் இருக்கின்றனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சதீஷ் விபத்தில் உயிரிழந்தார். இதனால் விபத்து காப்பீட்டில் வந்த தொகையை வைத்து சரண்யா தனது மகன்களை கவனித்து வந்தார். குடும்ப செலவுக்கு துணி வியாபாரமும் செய்தார். இந்த நிலையில் சரண்யாவுக்கு அதே பகுதியில் வசிக்கும் கணவன் மனைவியான காந்தி குமார், சத்யராணி ஆகியோருடன் நட்பு ஏற்பட்டது.

அவர்கள் சரண்யாவிடம் நைசாக பேசி கொஞ்சம் கொஞ்சமாக 10 லட்சம் ரூபாய் வரை பணம் வாங்கியுள்ளனர். சம்பவம் நடைபெற்ற அன்று சரண்யா காந்திகுமாரிடம் பணத்தை தருமாறு கேட்டார். அப்போது காந்தி குமார் எனது மனைவியிடம் பணம் கேட்க வேண்டாம். நானே தந்து விடுகிறேன் என கூறி வீடியோ காலில் பேசியுள்ளார். அவரது பேச்சில் மாற்றம் தெரிந்ததால் சுதாரித்துக் கொண்ட சரண்யா அடிக்கடி எனக்கு போன் பண்ணாதீங்க. பணத்தை மட்டும் கொடுங்க என கூறியுள்ளார்.

இதனால் கோபமடைந்த காந்தி குமார் சரண்யாவுடன் வீடியோ காலில் பேசியதை ஸ்கிரீன்ஷாட் எடுத்து வைத்துக் கொண்டார். அதன் பிறகு அதனை சரண்யாவிடம் காட்டி பணத்தை கேட்டால் வீடியோ காலில் பேசிய போட்டோவை சோசியல் மீடியாவில் பதிவிட்டு உனக்கும் எனக்கும் கள்ளத்தொடர்பு இருப்பதாக கூறி அசிங்கப்படுத்தி விடுவேன் என மிரட்டியுள்ளார். இதுகுறித்து சரண்யா காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் காந்தி குமார், சத்யராணி ஆகிய இருவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.