
ராணிப்பேட்டை மாவட்டம் கிடங்கு தெருவைச் சேர்ந்த அருண்பிரகாஷ் (35). இவர் கடந்த ஏழு ஆண்டுகளுக்கு முன்பு பெங்களூரைச் சேர்ந்த அஸ்வினி என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். ஜெயின் கோவிலில் பூசாரியாக பணியாற்றி வந்த இவர், குடும்பச் சூழ்நிலை காரணமாக மனைவியுடன் இணைந்து சிற்றுண்டி தயாரித்து விற்பனை செய்து வந்தார். ஆனால், தொடர்ந்து பொருளாதார சிக்கல்களால் அவர் பல இடங்களில் கூடுதல் வட்டிக்கு கடன் வாங்கியதாக கூறப்படுகிறது. இந்நிலையில், அவரது மனைவி அஸ்வினி ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு கருவுற்று, நான்கு மாத கர்ப்பிணியாக இருந்தார். கடந்த சில நாட்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டதால், அவர் வாலாஜாபேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
மருந்திற்காக பணம் தேடிய கோயில் பூசாரி
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தனது மனைவிக்கு சிகிச்சை தொடர வெளியில் இருந்து மருந்து வாங்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது. ஆனால், அதற்குத் தேவையான பணம் இல்லாததால், காலை யாரிடமாவது பணம் பெற்று மருந்து வாங்கிவிட்டு வருகிறேன் என அருண்பிரகாஷ் கூறியுள்ளார். ஆனால், அடுத்த நாள் காலை கோயிலுக்கும் செல்லாததோடு, மருத்துவமனைக்கும் வராததால் சந்தேகம் அடைந்த அவரது மனைவி வீட்டிற்கு சென்று பார்த்துள்ளார். வீட்டின் கதவு உள்ளிருந்து பூட்டப்பட்ட நிலையில் நீண்ட நேரமாக கதவை தட்டியும் திறக்காததால், அக்கம்பக்கத்தினர் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, அறையில் மின்விசிறியில் தூக்கிட்டு உயிரிழந்த நிலையில் அருண்பிரகாஷ் சடலமாக கிடந்தார்.
இந்த தகவல் கிடைத்தவுடன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து, அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதிக வட்டிக்கு கடன் வாங்கியதாலும், கர்ப்பிணி மனைவிக்கு மருந்து வாங்க முடியாத காரணத்தினாலும் மனமுடைந்த பூசாரி தற்கொலை செய்து கொண்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இச்சம்பவம் ராணிப்பேட்டை பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.