மதுரை மாவட்டம் துரை அலங்காநல்லூரில் அமைந்துள்ள கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கில், மேலூர் சட்டமன்ற தொகுதிக்கான ஜல்லிக்கட்டு போட்டி கோலாகலமாக நடைபெற்றது. இந்த விழாவை வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத் துறை அமைச்சர் மூர்த்தி கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில், மேலூர் தொகுதியிலிருந்து தேர்வு செய்யப்பட்ட ஆயிரம் காளைகளும், 650 வீரர்களும் போட்டியில் பங்கேற்றனர்.

வீரர்கள் அதிகபட்சமாக காளைகளை கட்டுப்படுத்த முயற்சித்தனர், அதேசமயம், காளைகளின் உரிமையாளர்களும் தங்கள் மாடுகளின் வீரத்தைக் காட்ட முயன்றனர். சிறப்பாக செயல்பட்ட வீரர்களுக்கும், காளைகளின் உரிமையாளர்களுக்கும் சைக்கிள், மிக்ஸி, மெத்தை, சில்வர் அண்டா உள்ளிட்ட பல்வேறு பரிசுகள் வழங்கப்பட்டன.

இந்த ஜல்லிக்கட்டு போட்டி உற்சாகமாக நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, கச்சிராயிருப்பு பகுதியைச் சேர்ந்த 25 வயதான மகேஷ் பாண்டி என்பவர், மாடுபிடியில் பங்கேற்றார். போட்டி நடந்து கொண்டிருந்த போது, களத்திலிருந்து வெளியேறிய ஒரு காளை அவரை முட்டி தூக்கி வீசியது.  இதனால் மகேஷ் படுகாயமடைந்து உயிருக்கு போராடினார். அங்கு தயார் நிலையில் இருந்த மருத்துவ உதவிப் படையினர் அவரை உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மகேஷ் பரிதாபமாக உயிரிழந்தார்.

மகேஷ் பாண்டி சீனாவில் வேலை செய்து வந்த நிலையில், விடுமுறைக்கு சொந்த ஊருக்கு வந்திருந்தார். இந்த விடுமுறையின் போது தான், மேலூர் தொகுதி ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்றார். வீரராக மாடுபிடியில் பங்கேற்ற மகேஷ், எதிர்பாராதவிதமாக உயிரிழந்தது அவரது குடும்பத்தினரை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.