மகாராஷ்டிரா மாநிலம் கோலாப்பூரில் நடந்த சோக சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது 55 வயதான தீரஜ் பாட்டீல் என்பவர் தனது காரில் வேலைக்குச் சென்று கொண்டிருந்த போது திடீரென அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. இதனால் அவருடைய வாகனம் கட்டுப்பாட்டை இழந்தது. இதன் காரணமாக அவர் ஓட்டிக்கொண்டிருந்த கார் மேம்பாலம் அருகே, ஒரு ஆட்டோ, ஒரு கார், ஒரு இருசக்கர வாகனம் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட வாகனங்கள் மீது மோதியது.

இந்த கோர விபத்தில் பல வாகனங்கள் பலத்த சேதமடைந்தன.  இந்த விபத்தில் தீரஜ் பாட்டில் (55) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் அவர்கள் சம்பவ இடத்திற்கு சென்று அவருடைய உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனை அறிக்கையில் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது தெரியவந்தது. மேலும் இந்த சம்பவம் கடந்த சனிக்கிழமை அதிகாலை நடந்த நிலையில் இது குறித்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.