ஜார்க்கண்ட் மாநிலம் கிரிடி மாவட்டம், குக்ரா பகுதியில் ஒரு குடும்பத்தில் நடந்த சோகமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது 36 வயதான ஒரு நபர் தனது மூன்று குழந்தைகளையும் நேற்று காலை கழுத்து நெரித்துக் கொன்றுவிட்டு, பின்னர் தானும் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளதாக போலீசார் சந்தேகிக்கின்றனர். இந்த சம்பவம் குறித்து தகவல் கிடைத்தவுடன் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடல்களை மீட்டனர். மரணத்திற்கான காரணம் குறித்து மேலும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அந்த நபர் கொத்தனார் வேலை செய்து வந்ததாகவும், அவரது மனைவி சம்பவத்திற்கு முன்னதாக தனது பெற்றோர் வீட்டிற்குச் சென்றிருந்ததாகவும் தெரிகிறது. தந்தை ஏன் தனது குழந்தைகளை கொன்றார் என்பதற்கான முழு விபரங்கள் இன்னும் வெளியாகவில்லை. தடயவியல் நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டு, ஆதாரங்களை சேகரித்து வருகின்றனர். மேலும், இந்த மரணங்களில் ஏதேனும் சந்தேகம் உள்ளதா என்பதை உறுதி செய்ய, போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் என மாவட்ட எஸ்.பி. பிமல்குமார் தெரிவித்துள்ளார்.