
தெலுங்கு நடிகர் விஷ்வக் சேனின் ஹைதராபாத் பிலிம் நகரில் உள்ள வீட்டில் கடந்த 16-ஆம் தேதி கொள்ளை சம்பவம் அரங்கேறியுள்ளது. இந்த சம்பவம் நடந்ததற்கு இரண்டு நாட்களுக்கு முன்னரே விஷ்வக் சேனின் குடும்பத்தினர் வெளியூர் சென்றிருந்தனர். இந்த நிலையில் வீட்டில் ஆட்கள் இல்லாத சமயம் வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர்கள் வைர மோதிரம், தங்க நகைகள், 2.2 லட்ச ரூபாய் பணம் ஆகியவற்றை திருடி விட்டு தப்பி சென்றனர்.
இதுகுறித்து விஷ்வக் சேனின் தந்தை கராத்தே ராஜு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர். இந்த வழக்கில் சந்தேகப்படும் சில பேர் கைது செய்யப்பட்டனர். இந்த விவகாரம் குறித்து விஷ்வக் எந்த பொது அறிக்கையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
திரைப்பட ரீதியாக, விஷ்வக் சேன் கடைசியாக நடித்த ‘Laila’ திரைப்படம் ரசிகர்களிடையே எதிர்பார்த்த வரவேற்பைப் பெறவில்லை. கடந்த சில வருடங்களில் தனக்கென தனி ரசிகர் பட்டாளம் உருவாக்கி வந்த விஷ்வக் சேன், தற்போது தனது அடுத்த படத்திற்கு தீவிரமாக தயாராகி வருகிறார்.