விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே ஆலவூரணியை சேர்ந்தவர் பெருமாள். இவரது மகன் சுரேஷ்(27) கூலி வேலை பார்த்து வருகிறார். இவருக்கு ஏற்கனவே  திருமணம் ஆகிவிட்டது. நேற்று முன்தினம் இரவு 11:00 மணிக்கு  மர்ம நபர்கள் சிலர் சுரேஷின் வீட்டிற்குள் நுழைந்து அவரை சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பி சென்றனர். இதனால் படுகாயமடைந்த சுரேஷ் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயை உயிரிழந்தார். இதுகுறித்து  அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று  சுரேஷின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தியதில், கடந்த ஆண்டு சத்யா நகரை சேர்ந்த குணசேகரன் என்பவரை கொலை செய்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக சுரேஷ் கைது செய்யப்பட்டுள்ளார்.  அவர் ஜாமீனில் வெளியே வந்தார். இதனால் குணசேகரன் கொலைக்கு பழி தீர்க்கும் வகையில் குணசேகரனின் தம்பி மதனகோபால் சுரேஷை கொலை செய்தது  தெரியவந்துள்ளது. தலைமறைவாக இருக்கும் மதனகோபாலை போலீசார் தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.