
திருவள்ளூர் மாவட்டம் பொதட்டூர்பேட்டை அருகே ராமசமுத்திரம் கிராமத்தை சேர்ந்த 27 வயதான சூர்யா, கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டைவிட்டு வெளியேறி காணாமல் போனார். அவரை குடும்பத்தினர் தேடி வந்த நிலையில், புச்சிரெட்டிபள்ளி அருகே காப்புக்காடு பகுதியில் உள்ள மரத்தில் புடவையால் தூக்கிட்டு தற்கொலை செய்த நிலையில் சூர்யாவின் உடல் கிடந்தது. இதுகுறித்து அறிந்த சூர்யாவின் குடும்பத்தினர் அங்கு சென்று பார்த்தபோது, தற்கொலை செய்தவர் சூர்யா என்பதும் உறுதியானது. பின்னர் போலீசார், அவரது உடலை மீட்டு திருத்தணி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி, சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தியுள்ளனர்.
அந்த விசாரணையில் பைக்குக்கான மாத தவணை செலுத்த உறவினர் ஒருவர் கொடுத்த பணத்தை சூர்யா செலவு செய்துள்ளார். இதுகுறித்து உறவினர் கேட்டதால் என்ன சொல்வது என்று தெரியாமல் மன உளைச்சலில் சூர்யா தற்கொலை செய்தது தெரியவந்தது. சூர்யா 10 ஆண்டுகளுக்கு முன்பு நிரோஷா என்பவரை காதல் திருமணம் செய்து கொண்டார். ஆனால் இந்த தம்பதிக்கு குழந்தை இல்லை. தற்போது கணவரையும் இழந்து நிரோஷா வேதனையில் உள்ளார்.