
இன்றைய காலகட்டத்தில் அனைவருமே சிலிண்டர் பயன்படுத்தி வருகிறார்கள். வீடுகளில் சிலிண்டர் பயன்படுத்துபவர்கள் பொதுவாக ஒன்று அல்லது இரண்டு இணைப்புகளை வைத்து இருக்கிறார்கள். அதிலும் இரண்டு இணைப்பு வைத்திருப்பவர்கள் ஒரு சிலிண்டர் இருக்கும் போது இன்னொரு சிலிண்டருக்கு புக் செய்து விடுகிறார்கள். ஆனால் மத்திய அரசானது வருடத்திற்கு மொத்தம் 12 சிலிண்டர்க்கு மட்டுமே மானிய தொகையை வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தி வருகிறது. இந்த நிலையில் வருடத்திற்கு 15 சிலிண்டர்கள் பயன்படுத்தி அதற்கு மேல் பதிவு செய்யும் வாடிக்கையாளர்களுக்கு இந்தியன் ஆயில் நிறுவனம் எஸ்எம்எஸ் ஒன்றை அனுப்புவதாக தகவல் வெளியாகி உள்ளது.
அதாவது, அன்புள்ள வாடிக்கையாளர்களே உங்கள் சமையல் கேஸ் சிலிண்டர் பதிவை ஏற்க முடியாது. ஏனெனில் நீங்கள் இந்த வருடம் ஒதுக்கிடப்பட்ட 213 கிலோவை பயன்படுத்தி விட்டீர்கள் என்று எஸ்எம்எஸ் அனுப்புவதாக தகவல் வெளியாகியிருக்கிறது. சிலிண்டர் எரிவாயு வீட்டிற்கு பயன்படுத்தப்படுகிறதா? அல்லது வேறு ஏதேனும் முறைகேடுகளுக்கு பயன்படுத்தப்படுகிறதா? என்பதை கண்டறிய இது போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. கூடுதல் சிலிண்டர் தேவைப்படுபவர்கள் கேஸ் ஏஜென்சி இடம் கேட்டு வாங்கிக் கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது