
தூத்துக்குடி காந்திநகரை சேர்ந்தவர் ஜியோ. இவர் கப்பலில் ஊழியராக வேலை பார்க்கிறார். இவரது மனைவி ஜெயராணி. இந்த நிலையில் ஜெயராணி வீடு வாங்குவதற்காக தனது நகைகளை ஒரு பெரிய வங்கியில் அடகு வைத்தார். இதனை அடுத்து உடல்நலம் குறைவால் பாதிக்கப்பட்ட ஜெயராணியின் மருத்துவ செலவிற்கு கூடுதல் பணம் தேவைப்பட்டது. இதனை அறிந்த தனியார் நிதி நிறுவன உரிமையாளரின் மனைவி ஜீவா என்பவர் ஜெயராணியிடம் நீங்கள் அடகு வைத்த நகைகளை மீட்டு கூடுதல் தொகைக்கு அடமானம் வைத்து தருகிறோம் எனக் கூறியுள்ளார்.
இதனால் 135 பவுன் தங்க நகைகளை மீட்டு தனியார் நிறுவனத்தில் 53 லட்சத்து 42 ஆயிரம் பணத்திற்கு மறு அடகு வைத்ததாக கூறப்படுகிறது. கடந்த ஜனவரி மாதம் ஜெயராணி தனது நகைகளை மீட்க 43 லட்சத்து 41 ஆயிரம் ரூபாய் பணத்தை கொடுத்துள்ளார். அப்போது ஜீவாவும், அவருக்கு உடந்தையாக இருந்த மகேஸ்வரன் என்பவரும் மொத்தமாக பணத்தையும் வட்டியுடன் செலுத்தினால் மட்டும் தான் நகையை மீட்டு தர முடியும் என கூறியுள்ளனர். மீதி பணத்தையும் தயார் செய்து அவர்களிடம் நகையை கேட்ட போது இருவரும் ஜெயராணிக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதுகுறித்து ஜெயராணி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் ஜீவாவை கைது செய்தனர். மகேஸ்வரனை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.