திருமணமான பின்னர் ஒரு பெண் தனிப்பட்ட உரிமைகளைப் பெறுவதை முடக்க முடியாது என்றும், சுய இன்பம் அனுபவிக்கவும், தடை செய்யப்படாத பாலுறவு சார்ந்த படங்களை தனிப்பட்ட முறையில் பார்ப்பதும் குற்றமல்ல என சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை அதிரடி தீர்ப்பளித்துள்ளது. கரூர் குடும்ப நீதிமன்றம் முன்பு தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், மனைவி பாலுறவு சார்ந்த படங்களை பார்ப்பதற்காக விவாகரத்து கோரிய கணவர், தனது மேல்முறையீட்டு மனுவை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தார். நீதிபதிகள் ஜி.ஆர். சுவாமிநாதன் மற்றும் ஆர்.பூர்ணிமா ஆகியோர் இந்த வழக்கை விசாரணை மேற்கொண்டு, திருமணமானாலும், ஒரு பெண்ணுக்கு தனிப்பட்ட உரிமைகள் தொடர்ந்தே இருக்கும் என்றும், இதுபோன்ற காரணங்களை அடிப்படையாக வைத்து விவாகரத்து கோர முடியாது என்றும் தெரிவித்தனர்.

வழக்கின் போது கணவர் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார், அதில் முக்கியமானது மனைவிக்கு பாலுறவு தொடர்பான நோய்கள் இருக்கின்றன என்பதே. ஆனால், இந்தக் குற்றச்சாட்டை ஆதரிக்கும் எந்த வலுவான ஆதாரமும் அவர் தாக்கல் செய்யவில்லை என்று நீதிமன்றம் தெரிவித்தது. மேலும், மனைவி தன்னுடைய உடல்நிலை சீராகவே இருப்பதை நிரூபிக்க அவகாசம் தரப்பட்டிருக்கிறது, ஆனால் கணவர் தரப்பில் அதற்கு ஏதேனும் மருத்துவச் சான்றுகள் இருந்ததாக தெரியவில்லை. இதனால், மனைவிக்கு பாலுறவு தொடர்பான நோய் இருக்கிறது என்பதற்கான ஆதாரங்கள் இல்லாத காரணத்தால், அந்த காரணத்தையும் நீதிமன்றம் நிராகரித்தது.

நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில், ஒரு பெண்ணின் தனிப்பட்ட உரிமைகளை கேள்விக்குள்ளாக்க முடியாது என்பதையும், அவள் பாலுறவு சுதந்திரத்தை மதிக்க வேண்டும் என்பதையும் வலியுறுத்தியது. சுய இன்பம் என்பது எந்தவித சட்டவிரோத செயலாகாது எனவும், அது ஒரு பெண்ணின் விருப்பம் என்பதால், அதை விவாகரத்துக்கான காரணமாகக் கொள்ள முடியாது என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர். எனவே, நீதிமன்றத்தின் தீர்ப்பு உறுதி செய்யப்படுவதோடு, விவாகரத்து கோரிய கணவரின் மேல்முறையீட்டு மனுவும் தள்ளுபடி செய்யப்படுகிறது என மதுரை கிளை உயர் நீதிமன்றம் அறிவித்தது.