
கர்நாடக மாநிலம் உடுப்பி மாவட்டத்தில் மல்பே மீன்பிடி துறைமுகம் அமைந்துள்ளது. இந்த துறைமுகத்தில் அமைந்துள்ள மீன் சந்தையில் உள்ள கடையில் ஒரு பெண் மீனை திருடியதாக கூறப்படுகிறது. இதனால் அந்த பெண்ணை அப்பகுதியை சேர்ந்த 3 பேர் சரமாரியாக தாக்கியுள்ளனர். அதோடு அவர்கள் அந்தப் பெண்ணுக்கு தண்டனை அளிக்கும் விதமாக மரத்தில் கட்டி வைத்து அடித்துள்ளனர்.
தற்போது இந்த சம்பவம் வீடியோவாக இணையதளத்தில் வைரலான நிலையில் அந்தப் பெண்ணை தாக்கிய 3 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். இதைத்தொடர்ந்து உடுப்பி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஒரு பெண்ணை இவ்வாறு மரத்தில் கட்டி வைத்து அடித்து தாக்குதல் என்பது மனிதாபிமானமற்ற செயலாகும் என்று கூறியுள்ளார். மேலும் திருட்டு மோசடியில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.