
ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அரக்கோணம் பகுதிக்கு அடுத்துள்ள மூகாம்பிகை நகர் பகுதியில் வசித்து வருபவர் அமுதா என்ற மூதாட்டி. இவர் சம்பவ நாளன்று தனது உடல்நலம் சரியில்லாத உறவினர் ஒருவரை பார்ப்பதற்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அதன் பின் நள்ளிரவில் வீடு திரும்பிய போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார்.
வீட்டில் உள்ளே சென்ற அமுதா வீட்டில் உள்ள பீரோவில் சோதனை செய்தபோது தான் வைத்திருந்த 7 சவரன் தங்க நகை மற்றும் கால் கிலோ வெள்ளி பொருட்கள், 20 ஆயிரம் ரொக்கப் பணம் திருடு போனது தெரியவந்தது. இதே போல் அதே பகுதியில் வசித்து வருபவர் யுவராஜ். இவர் ஒரு தனியார் நிறுவன ஊழியர். இவரது வீட்டிலும் மர்ம நபர்கள் வீட்டின் பூட்டை உடைத்து 3 சவரன் தங்க நகை மற்றும் கால் கிலோ வெள்ளி பொருட்களை திருடிச் சென்றுள்ளனர்.
இச்சம்பவம் குறித்து அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து இரு வீடுகளையும் சோதனை நடத்தி வருகின்றனர். மேலும் அப்பகுதியில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அடுத்தடுத்த வீட்டில் தங்க நகைகள் மற்றும் வெள்ளி பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.