ஹைதராபாத் அருகே போச்சாரம் பகுதியில் நடந்த கொடூர சம்பவத்தில் 4 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்காலிக கட்டுமான தளத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்த பெற்றோர்களுடன் ரியா என்ற நான்கு வயது சிறுமி சென்றுள்ளார். அந்த சிறுமி சாலைக்கு அருகே விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது ஹேம்ராஜ் என்பவர் பீர் பாட்டிலால் சிறுமியின் தலையில் ஓங்கி அடித்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் ஹேம்ராஜை பிடித்து தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர்.

இதற்கிடையே படுகாயம் அடைந்த ரியாவை மீட்டு உடனடியாக மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி ரியா பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தியதில் ஹேம்ராஜ் மனநல பிரச்சனையால் பாதிக்கப்பட்டவர் என கூறப்படுகிறது. அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்த விவகாரம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.