இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையிலான முரண்பாடு மேலும் தீவிரமாகிக் கொண்டிருக்கிறது. காஸா பகுதியில் உள்ள கான் யூனிஸ் நகரத்தில் இஸ்ரேல் நேற்று (மார்ச் 22) நடத்திய வான்வழித் தாக்குதலில், ஹமாஸ் அமைப்பின் மூத்த அரசியல் தலைவர் சலாஹ் பர்தாவில் (வயது 65) மற்றும் அவரது மனைவி உயிரிழந்தனர். அவர் பாலஸ்தீன நாடாளுமன்ற உறுப்பினராகவும் பணியாற்றியிருந்தார். இந்த தகவலை ஹமாஸ் அமைப்பே இன்று (மார்ச் 23) உறுதிப்படுத்தியுள்ளது.

இந்த தாக்குதலுக்கு பதிலளிக்கும்படி, ஹமாஸ் அமைப்பின் முக்கிய கூட்டாளிகளாகக் கருதப்படும் யேமனின் ஹவுதி அமைப்பினர், இஸ்ரேல் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இஸ்ரேல் முழுவதும் அபாய சங்கு ஒலிக்கப்பட்ட நிலையில் அந்த ஏவுகணையை தங்கள் பாதுகாப்பு அமைப்புகள் தகர்த்துவிட்டதாகவும், இதில் உயிர் அல்லது பொருள் சேதம் எதுவும் ஏற்படவில்லை என்றும் இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.

இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே கடந்த ஜனவரி மாதம் முதல் கடைபிடிக்கப்பட்டு வந்த போர்நிறுத்த ஒப்பந்தம் இப்போது முறியடிக்கப்பட்டுள்ளது. இதன் பின்னணியில் இஸ்ரேல், காஸா மீது திடீர் தாக்குதல்களை மேற்கொண்டு நூற்றுக்கணக்கான பாலஸ்தீன மக்களை கொன்றது குறிப்பிடத்தக்கது. இந்த நிலைமையால், இஸ்ரேல் மீது மீண்டும் தாக்குதல்களை ஹவுதி படையினர் தொடர்வது பகிரங்கமாகிவிட்டது.