
பிரபல யூடியூபரும் அரசியல் விமர்சகருமான சவுக்கு சங்கர் வீட்டில் தாக்குதல் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கீழ்ப்பாக்கம் பகுதியில் தனது தாயுடன் வசித்து வரும் சவுக்கு சங்கர், அரசியல் மற்றும் சமூக விவகாரங்களைத் தொடர்ந்து விமர்சித்து வரும் நிலையில், பல்வேறு சர்ச்சைகள் மற்றும் வழக்குகளுக்கும் இடையே இருந்து வருகிறார். இதனால் முன்னதாக அவர் போலீசாரால் கைது செய்யப்பட்டு, சிறைவாசம் அனுபவித்ததும் குறிப்பிடத்தக்கது.
ஜாமினில் வெளிவந்த பின்னரும், யூடியூப் மற்றும் சமூக வலைதளங்களில் தனது கருத்துகளை தொடர்ச்சியாக வெளியிட்டு வந்தார். இந்நிலையில், தூய்மைப் பணியாளர்கள் குறித்து அவதூறாக பேசியதாகக் கூறி, சுமார் 50 பேர் கொண்ட குழுவினர் இன்று காலை 9.30 மணி அளவில் அவரது வீடுக்கு வந்து தாக்குதல் நடத்தினர். இதுகுறித்த தகவலை சவுக்கு சங்கர் தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
அதில், தாக்குதலாளர்கள் வீட்டின் கதவை உடைத்து உள்ளே நுழைந்து, படுக்கையறை, சமையலறை உள்ளிட்ட பகுதிகளில் சாக்கடை மற்றும் கழிவுகளை வீசி சேதப்படுத்தியதாகவும், அவரது தாயாரிடம் கோரமாக நடந்துகொண்டதாகவும் கூறியுள்ளார்.இதுகுறித்து அறிந்து தாயை செல்போன் மூலம் தொடர்பு கொண்ட போது அவர்கள் செல்போனை கைப்பற்றி வீடியோ காலில் கொலை மிரட்டல் விடுத்ததாகவும் தெரிவித்துள்ளார். சம்பவம் தொடர்பாக காவல் கட்டுப்பாட்டு அறைக்கு புகாரளித்ததற்கு பின்னர், ஒரே ஒரு உதவி ஆய்வாளரும் காவலரும் மட்டுமே வருவதாகவும் சவுக்கு சங்கர் குற்றம்சாட்டியுள்ளார்.