
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே ராஜேந்திரன் என்பவர் வாழ்ந்து வருகிறார். இவருக்கு பாண்டியன்(45) மற்றும் காளிதாஸ்(36) என்ற இரண்டு மகன்கள் இருந்துள்ளனர். பாண்டியனுக்கு ஏற்கனவே திருமணம் ஆகிவிட்டது. அவர் தேனாம்படுகை ஊராட்சியில் உள்ள நடுநிலைப்பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். காளிதாசுக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். காளிதாஸ் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையானதால் அவரது மனைவி குழந்தைகளுடன் தனியாக வாழ்கிறார். கடந்த வெள்ளிக்கிழமை காளிதாஸ் மது குடித்துவிட்டு வீட்டிற்கு அருகில் நின்று ஆபாச வார்த்தைகளால் பேசிக் கொண்டிருந்தார். அப்போது பாண்டியன் தனது தம்பியை தட்டி கேட்டார்.
இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது கோபத்தில் காளிதாஸ் தனது அண்ணனை அடிக்க பாய்ந்தார். உடனே பாண்டியன் அருகில் கிடந்த கட்டையால் காளிதாசின் மண்டையில் ஓங்கி அடித்தார். இதனால் மயங்கி விழுந்த காளிதாஸ் மறுநாள் காலை வரை எழுந்திருக்கவில்லை. எனவே அக்கம் பக்கத்தினர் அவரை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர் காளிதாஸ் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் பாண்டியனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.