
இந்திய ரிசர்வ் வங்கி (RBI) மே 1, 2025 முதல் ஏடிஎம் பரிமாற்ற கட்டணங்களை அதிகரிக்க ஒப்புதல் அளித்துள்ளது. இதன் விளைவாக, வாடிக்கையாளர்கள் தங்கள் சொந்த வங்கியைத் தவிர வேறு வங்கியின் ஏடிஎம்களில் பணம் எடுக்கும் போது மேலும் அதிக கட்டணத்தை செலுத்த வேண்டியிருக்கும். இது மட்டுமின்றி, பேலன்ஸ் செக் செய்வதற்கும் கூடுதல் கட்டணம் விதிக்கப்படும். தற்போது ஒரு பரிவர்த்தனைக்கு ரூ.17 கட்டணம் வசூலிக்கப்படுகிறது; இது மே மாதம் முதல் ரூ.19 ஆகும். பேலன்ஸ் செக் செய்வதற்கான கட்டணமும் ரூ.6 இலிருந்து ரூ.7 ஆக அதிகரிக்கப்படுகிறது.
இந்த கட்டண உயர்விற்கு காரணம், வாடிக்கையாளர் ஒருவர் வேறு வங்கியின் ஏடிஎமில் பணம் எடுக்கும் போது, அந்த வங்கிக்கு அவருடைய சொந்த வங்கி செலுத்தும் பரிமாற்றக் கட்டணம் தான். இந்த கட்டணங்களை சமநிலைப்படுத்தும் வகையில், நேஷனல் பேமெண்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (NPCI) முன்மொழிந்த பரிந்துரையின் அடிப்படையில் ரிசர்வ் வங்கி இந்த கட்டண உயர்வை ஒப்புக்கொண்டுள்ளது. இது வங்கிகளுக்கு ஏடிஎம் பராமரிப்பு செலவுகளை ஈடுசெய்ய உதவுகிறது.
வாடிக்கையாளர்கள் வங்கியின் மாதாந்திர இலவச பரிவர்த்தனை வரம்பிற்குள் தான் ஏடிஎம்களை பயன்படுத்துவது அவசியம். இல்லையெனில், ஒவ்வொரு கூடுதல் பரிவர்த்தனைக்கும் இந்த உயர்ந்த கட்டணங்களைச் சந்திக்க வேண்டியிருக்கும். இத்தகைய கட்டண உயர்வுகள், அடிக்கடி ஏடிஎம் பரிவர்த்தனைகள் செய்பவர்களுக்கு நிச்சயமாக பாதிப்பை ஏற்படுத்தும். எனவே, வாடிக்கையாளர்கள் தங்களின் பண பரிவர்த்தனை பழக்கங்களை சீராக பரிசீலித்து, நிதி திட்டமிடல் நடைமுறைகளைச் சரிசெய்வது நல்லது.