தென்கிழக்கு ஆசிய நாடான மியான்மரில் இன்று அதிபயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்திய நேரப்படி காலை 11.50 மணியளவில் நிகழ்ந்த இந்த நிலநடுக்கம் 7.7 ரிக்டர் அளவில் பதிவு செய்யப்பட்டது. நிலநடுக்கத்தால் மக்கள் அச்சத்தில்  வெளியே ஓடி வந்து தஞ்சம் புகுந்தனர். இதனையடுத்து, 6.4 ரிக்டர் அளவில் மற்றொரு பூகம்பமும் ஏற்பட்டது. அதன் பிறகும் 3 முறை நிலநடுக்கம் உணரப்பட்டதால் மக்கள் பீதியில் உள்ளனர்.

பூகம்பத்தின் மையம் உள்நாட்டுப் போரால் பாதிக்கப்பட்ட சாகிங் பகுதியில் உள்ளதாகவும், அந்த பகுதியில் பாதிப்பு மிக மோசமாக இருக்கும் என்று அஞ்சப்படுகிறது. மியான்மருக்கு அண்டைய நாடான தாய்லாந்திலும் இந்த நிலநடுக்கத்தால் பெரும் தாக்கம் ஏற்பட்டுள்ளது. தலைநகர் பாங்காக்கில் உள்ள உயரமான அடுக்குமாடி கட்டிடங்கள் பல அதிர்ந்தன, சில கட்டிடங்கள் இடிந்து விழுந்தன.

ஒரு 30 மாடி கட்டிடம் ஒரே நொடியில் தரைமட்டமாகி, 43 தொழிலாளர்கள் சிக்கியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மீட்புப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், பாங்காக்கில் அவசரநிலையும் அறிவிக்கப்பட்டுள்ளது. பாதிப்பு மேலும் அதிகரிக்கக் கூடும் என்ற பீதியுடன், கட்டிட ஆய்வுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

மியான்மரில் நிலவும் அரசியல் குழப்பங்களைத் தொடர்ந்து, ராணுவ ஆட்சி தான் தற்போது அதிகாரத்தில் உள்ளது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பேரழிவை முன்னிட்டு, மியான்மர் அரசு 6 பகுதிகளில் அவசரநிலையை அறிவித்துள்ளது.

மேலும், சர்வதேச சமூகத்திடம் மனிதாபிமான உதவியை கோரியுள்ளது. நாய்பிடாவில் உள்ள மருத்துவமனைகளில் பலர் காயங்களுடன் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட பகுதிகளில் போக்குவரத்து வசதிகள் இல்லாததால், மீட்பு பணிகள் சிக்கலாக நடைபெற்று வருவதால், பாதிப்பின் அளவு இன்னும் முழுமையாக தெரியவில்லை.