அஸ்ஸாம் மாநில அரசு, மனைவி இல்லாத ஆண் அரசு ஊழியர்களுக்கு குழந்தைகளை பராமரிக்க கூடிய சிறப்பு விடுப்பு வழங்கும் தீர்மானத்தை அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பை மாநில முதலமைச்சர் ஹிமந்த பிஸ்வா சர்மா தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

“வாழ்க்கையில் சில நேரங்களில் எதிர்பாராத மாற்றங்கள் ஏற்படலாம். அப்போது ஒரே பெற்றோர் நிலை உருவாகும்போது, ஆண்கள் தங்கள் குழந்தைகளுக்காக நேரத்தை செலவிட வேண்டியது அவசியம். இதை கருத்தில் கொண்டு குழந்தை பராமரிப்பு விடுப்பை வழங்குகிறோம்” என்று அவர் கூறியுள்ளார்.

பொதுவாக, குழந்தைகளை நோய்கள், கல்விச் சவால்கள் போன்ற சூழ்நிலைகளில் கவனிக்க பெண் அரசு ஊழியர்களுக்கு சம்பளத்துடன் கூடிய குழந்தை பராமரிப்பு விடுப்பு வழங்கப்பட்டு வந்தது. தற்போது, அதே சலுகையை மனைவி இல்லாத ஆண் அரசு ஊழியர்களுக்கும் வழங்குவதால், ஒற்றைத் தந்தையாக இருப்போர் பயன்பெற முடியும்.

 

இது ஆண்களுக்கும் சமவாய்ப்பு கொடுக்கும் ஒரு முன்மாதிரித் தீர்மானமாகும் என்று சமூக வலைதளங்களில் பாராட்டுகள் எழுந்துள்ளன. இந்த விடுப்பை பெற, அரசு ஊழியராக இருக்க வேண்டும் மற்றும் 18 வயதுக்குட்பட்ட குழந்தைகளைப் பெற்றிருக்க வேண்டும். பெற்றெடுத்த குழந்தைகள் மட்டுமன்றி, தத்தெடுத்த குழந்தைகள் மற்றும் சட்டப்பூர்வமாக பராமரிக்கப்படும் குழந்தைகளுக்கும் இந்த சலுகை வழங்கப்படும்.

மேலும், மாற்றுத்திறனாளி குழந்தைகளை வைத்திருக்கும் ஆண்கள் கூடுதல் நாட்கள் விடுப்பு பெற முடியும். அதிகபட்சமாக 730 நாட்கள் (2 ஆண்டுகள்) வரை இந்த சலுகையைப் பயன்படுத்தலாம் என அஸ்ஸாம் அரசு தெரிவித்துள்ளது.