
பெங்களூருவில் மனைவியை மக்கள் முன்னிலையில் கொலை செய்த கொடூர சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிக்கபல்லாபூர் மாவட்டம் பாகேபள்ளியை சேர்ந்த கிருஷ்ணப்பா (43), தினசரி கூலி தொழிலாளியாக பணியாற்றி வருகிறார்.
அவரது மனைவி சாரதா (35), பெங்களூரு எலக்ட்ரானிக் சிட்டி பகுதியில் வேலை பார்த்து வந்தார். கடந்த சில மாதங்களாகவே மனைவியின் நடத்தை மீது சந்தேகம் கொண்ட கிருஷ்ணப்பா, அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளார்.
கடந்த வெள்ளிக்கிழமை இரவு 8 மணியளவில், வேலை முடித்து வீடு திரும்பிய சாரதா, எலக்ட்ரானிக் சிட்டி சாலையில் நடந்துகொண்டிருந்தபோது, அங்கு காத்திருந்த கிருஷ்ணப்பா திடீரென மனைவியின் கழுத்தில் கூரிய ஆயுதத்தால் குத்தி தாக்கினார்.
இதில் படுகாயமடைந்த சாரதா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனை பார்த்து பொது மக்கள் கத்தி கூச்சலிட்ட நிலையில், கிருஷ்ணப்பா தப்பிக்க முயன்றார்.
உடனே தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, சாரதாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பினர். இதனைத் தொடர்ந்து, கொலை செய்த கிருஷ்ணப்பாவை போலீசார் கைது செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.