அமைச்சர் ரகுபதி தனது எக்ஸ் பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது, பாஜகவின் அடிமையாக வாழ்வதையே அரசியல்’ என வாழும் பாதந்தாங்கி பழனிசாமி அவமானப்படுவது உறுதிகடந்த 2 ஆண்டுகளாக ’’பாஜகவுடன் கூட்டணி கிடையாது’’ என்று சத்தியம் செய்து வந்த பழனிசாமி, இன்று டெல்லி மேலிடத்தின் மிரட்டலுக்குப் பயந்து, சிறைக்கு அஞ்சி, தாங்கள் அடித்த கொள்ளை பணத்தைப் பாதுகாக்க மீண்டும் பாஜக கூட்டணிக்குத் தயாராகி விட்டார்.

அவரும் அவருடைய அடிவருடிகளும் பாஜகவின் பிரமுகர்களை முறை போட்டுப் போய் பார்த்துவிட்டு வருகிறார்கள். அந்த வகையில் எடப்பாடி பழனிச்சாமியின் வார்த்தையை நம்பி ஏமாற்றம் அடைந்த அதிமுகவின் ஒவ்வொரு தொண்டனுமே தியாகிகள்தான்! அவர்களுக்கும் எடப்பாடி துரோகிதான்!. பாஜகவுடன் இதுகாலம் வரையில் இருந்த கள்ளக்கூட்டணி, கரம் பிடிக்கும் கூட்டணியாக மாறப் போவதால், ரத்தத்தின் ரத்தங்களும் மக்களும் நாக்கை பிடுங்கும் வகையில் கேள்வி கேட்பார்கள். அதை மடைமாற்ற திமுக அரசு மீது வதந்திகளை பழனிசாமி பரப்பி வருகிறார்.

பாஜகவின் தயவில் அரசியல் வண்டியை ஓட்ட நினைக்கிறார் பழனிசாமி. தனக்கு முதுகெலும்பு இருப்பதே, பாஜகவிற்கு வளைந்து கொடுத்து அடிமை சேவகம் செய்வதற்குத்தான் என ஒன்றிய அரசின் காலடியில் வீழ்ந்து கிடக்கும் பாஜகவின் பண்ணையடிமைதான் பழனிசாமி.
தனது டெல்லி எஜமானர்களின் ஏவல் படையான அமலாக்கத்துறை தமிழ்நாடு டாஸ்மாக் அலுவலகத்தில் நடத்திய ஒரு முகாந்திரமற்ற சோதனையை வைத்துக் கொண்டு, அபத்தமான கேள்வியோடு தனது கோமாளித்தனத்தைக் காட்டிக் கொண்டிருக்கிறார் பழனிசாமி. யார் அந்த சார்? என்ற புரளி நாடகம் அம்பலப்பட்ட பிறகு வேறு ஏதேனும் கிடைக்காதா என்று திணறிக் கொண்டிருக்கிறார் என்று கூறியுள்ளார்.