ஆந்திர மாநிலத்தில் உள்ள குண்டூர் மாவட்டத்தில் சுவர்னபாரதி பகுதியில் தெருநாயால் ஏற்பட்ட விபரீத சம்பவம் பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளது. அதாவது சுவர்னபாரதி பகுதியைச் சேர்ந்த 4 வயது சிறுவன் கடந்த ஏப்ரல் 6ஆம் தேதி அன்று தனது வீட்டிற்கு வெளியே தனது நண்பர்களுடன் விளையாடிக் கொண்டிருந்தார்.

அப்போது தெருவில் நின்று கொண்டிருந்த நாய் ஒன்று திடீரென அந்த சிறுவனை வேகமாக துரத்தியது. இதனால் பதறி அடித்து சிறுவன்  ஓடியுள்ளார். ஆனால் நாய் வேகமாக சென்று சிறுவனின் கழுத்தில் கடித்துள்ளது. இதனால் சம்பவ இடத்திலேயே சிறுவன் ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்துள்ளார்.

இதனைக் கண்ட சக சிறுவர்கள் கத்தி கூச்சலிட்டுள்ளனர். மேலும் அருகில் கிடந்த கற்களை கொண்டு தெரு நாயை  விரட்ட முயற்சித்துள்ளனர். சிறுவர்களின் அலறல் சத்தம் கேட்ட அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் ரத்த வெள்ளத்தில் கிடந்த சிறுவனை மீட்டு  அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

ஆனால் சிறுவன் ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். தெரு நாய் கடித்ததில் சிறுவனின் கழுத்துப் பகுதியில் ஏற்பட்ட படுகாயத்தால் அதிகளவு ரத்தப்போக்கு ஏற்பட்டுள்ளது இதனால் சிறுவன் இறந்துள்ளார் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து அப்பகுதியில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் அப்பகுதி பொதுமக்கள் தெருநாய்களை கட்டுப்படுத்த பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என நகராட்சிக்கு கோரிக்கை வைத்துள்ளனர். நாய் கடித்ததில் 4 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.