
இந்தியாவில் அதிகப்படியான கொழுப்பு, உப்பு மற்றும் சர்க்கரை (HFSS) கொண்ட உணவுகளுக்கான விளம்பரங்கள், சிறுவர்கள் உட்பட பொதுமக்களின் உடல்நலத்திற்கு பெரும் ஆபத்தை ஏற்படுத்துவதாக Nutrition Advocacy in Public Interest (NAPI) அமைப்பு எச்சரித்து வருகிறது.
பொருளாதார கணக்கெடுப்பு 2024-25-ல் வெளியான தகவல்களையும் அடிப்படையாகக் கொண்டு, HFSS மற்றும் உயர் செயலாக்கம் செய்யப்பட்ட உணவுகளுக்கான (UPF) விளம்பரங்களை தடை செய்யும் வகையில் சுகாதார அமைச்சகம் கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என NAPI சிபிஐயுடன் இணைந்து வலியுறுத்தியுள்ளது.
புகையிலை மற்றும் மதுபான விளம்பரங்களை போலவே, HFSS உணவுகளுக்கும் சட்ட தடை விதிக்க வேண்டும் என்றும், பிரபலங்கள் விளம்பரங்களில் பங்கேற்கும் செயல்களுக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குழந்தைகளை குறிவைக்கும் விளம்பரங்களை முழுமையாக தடைசெய்து, HFSS உணவுகளுக்கு கட்டாய எச்சரிக்கை லேபிள்கள் வைக்க வேண்டும் என்றும் கோரியுள்ளது. தற்போது உச்சநீதிமன்றமும் இந்த விளம்பரங்கள் தொடர்பான வழக்குகளில் தலையிட்டு வரும் நிலையில், சுகாதார அமைச்சகத்திடமிருந்து கடுமையான நடவடிக்கை எதிர்பார்க்கப்படுகிறது.