
ஜார்கண்ட் மாநிலம் ராம்கரில் உள்ள ராஜ்ரப்பா சிசிஎல் டவுன்ஷிப் அலுவலகத்தில் துப்புரவுப் பணியாளராக பணியாற்றிய 60 வயதான சுமித்ரா தேவி, ஓய்வு பெறும் நாளில் சாதாரண ஓய்வூதிய விழாவை ஓர் அழகான ஆனந்தத் திருவிழாவாக மாற்றினார். அவரது மூன்று மகன்களில் ஒருவர் டாக்டராக, ஒருவர் ரயில்வே இன்ஜினீயராக, இன்னொருவர் மாவட்ட ஆட்சியராக உயர்ந்திருப்பது அவரது தாயாரின் கடின உழைப்பின் வெற்றி சான்றாக அமைந்தது.
முக்கியமாக, சிறந்த வாழ்கையைப் பெற்றும், தனது பிள்ளைகளின் பொருளாதார ஆதரவை நாடாமல், தனக்கென வாழும் மரியாதையை பேண வேண்டும் என்ற எண்ணத்தில், வேலை ஓய்வு பெறும் வரை அந்த பணியிலேயே தொடர்ந்திருக்கிறார் சுமித்ரா. “வேலை என்றால் மரியாதை. என் வாழ்க்கையின் கடைசி வரை நான் என் சுய உழைப்பில் சம்பாதிக்க விரும்பினேன்,” என்று அவர் கூறிய விதம் அனைவரையும் நெகிழ வைத்தது.
அந்த விழாவில், அவரது மூன்றாம் மகனும் தற்போது பீகாரின் சிவான் மாவட்ட ஆட்சியராக பணியாற்றும் மஹேந்திர குமார் உணர்ச்சிவசப்பட்டு பேசும்போது: “அம்மா எப்போதும் நமக்காக எல்லாவற்றையும் தியாகம் செய்தார். பல இரவுகளில் நம்மைக் காப்பாற்ற வாடியவர், எங்களுக்காக பட்டினியாக இருந்ததையும் மறக்க முடியாது.” என்றார்.
இவ்விழாவில் அவரது சக ஊழியர்கள், மகளிர் பணியாளர்கள் என பலரும் சுமித்ரா அவர்களின் நேர்மையான உழைப்பையும், தன்னிறைவு வாழ்க்கையையும் பாராட்டினர். அவரை நிஜமாக ஒரு ‘வெற்றிகரமான தாய்’ என்றும், ‘தன்னிறைவு வாழ்கையின் சின்னம்’ என்றும் மக்கள் போற்றுகிறார்கள். ஒரு பெண் தாயின் அர்ப்பணிப்பு எப்படி மூன்று சக்திவாய்ந்த தலைவர்களை உருவாக்கியது என்பதற்கான சிறந்த உதாரணம் சுமித்ரா தேவி என்று சொன்னால் நிச்சயம் மிகையாகாது. மேலும் இந்த சம்பவம் கடந்த சில வருடங்களுக்கு முன்பே நடந்த நிலையில் தற்போது இந்த செய்தி மீண்டும் திடீரென வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.