தெலுங்கானா மாநிலம் கரீம் நகர் மாவட்டத்திலுள்ள ரங்காராவ் பள்ளி பகுதியில் சீனிவாஸ் ரெட்டி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 9 வயதில் அஸ்வித் ரெட்டி என்ற மகன் இருந்துள்ளார். இந்த சிறுவன் கடந்த 3 நாட்களுக்கு முன்பாக தன் நண்பர்களுடன் சேர்ந்து கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தபோது திடீரென பந்து தலையில் பலமாகப்பட்டது. இதைத்தொடர்ந்து மறுநாள் சிறுவன் வழக்கம்போல் பள்ளிக்கு சென்ற நிலையில் திடீரென கடுமையான தலைவலி ஏற்பட்டுள்ளது.

உடனடியாக ஆசிரியர்கள் மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் பெற்றோருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. ஒரு தனியார் மருத்துவமனையில் சிறுவனுக்கு சிகிச்சை வழங்கப்பட்ட நிலையில் பின்னர் ஹைதராபாத்தில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக சிறுவன் மாற்றப்பட்டான். அங்கு தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வந்த நிலையில் நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தான். மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.