
அமெரிக்காவின் நியூ ஜெர்சியில், தனது முன்னாள் காதலரையும், அவரது மகளையும் கொலை செய்ய ஒரு மனிதரை இணையதள டேட்டிங் செயலியான டிண்டரில் சந்தித்து ஒப்பந்தம் செய்ததாக 26 வயதுடைய ஜாக்லின் டியோரியோ என்ற பெண்ணை கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து கேம்டன் கவுண்டி வழக்கறிஞர் அலுவலகம் செய்திக்குறிப்பு வெளியிட்டுள்ளது.
கோர்ட்டு ஆவணங்களின்படி, ஜாக்லின், தனது முன்னாள் காதலரான பிலடெல்பியா போலீஸ் அதிகாரி மற்றும் அவரது 19 வயதுடைய மகளை கொலை செய்ய $12,000 தொகையை டிண்டரில் சந்தித்த ஒருவருக்கு கொடுத்து முயற்சித்ததாக கூறப்படுகிறது. “D” என்ற மாற்றுப்பெயரை பயன்படுத்தி டிண்டரில் ஒரு தகவலாளரை ஜாக்லின் மார்ச் 31 அன்று நியூ ஜெர்சியின் ரன்னமீட் பகுதியில் சந்தித்தார்.
அதன்பின், இருவரும் தொடர்ந்து மெசேஜ்கள் மற்றும் தொலைபேசி அழைப்புகள் மூலம் தொடர்பில் இருந்தனர். இந்த உரையாடல்களில், ஜாக்லின் தனது முன்னாள் காதலரைக் கொலை செய்ய விரும்புவதாக நேரடியாக தெரிவித்ததாக கூறப்படுகிறது. ஏப்ரல் 3 அன்று, முக்கிய குற்றப்பிரிவு இந்த கொலை முயற்சி குறித்து தகவல் பெற்றது.
பின்னர், அந்த போலீசாரின் உறுதிப்படுத்தலின்படி, ஜாக்லின் அவரது முன்னாள் காதலி என உறுதி செய்யப்பட்டது. ஏப்ரல் 4 அன்று, ஜாக்லின் மீண்டும் தகவலாளரை சந்தித்து, $500 பணத்தை கொடுத்தார். மீதமுள்ள தொகை தவணையாக கொடுக்கப்படும் என கூறப்பட்டு, உடனடியாக கிளௌஸெஸ்டர் டவுன்ஷிப் போலீசாரால் கைது செய்யப்பட்டார். தற்போது ஜாக்லின் கேம்டன் கவுண்டி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த வழக்கில், ஏப்ரல் 9ஆம் தேதி நீதிமன்றத்தில் விசாரணைக்கு ஆஜராக இருக்கிறார்.