ஹரியானா மாநிலம் கைதாலில் உள்ள மேரி கோல்ட் பள்ளியில் லட்டு கோபால் ஜி என்ற சாமி சிலைக்கு பள்ளி மாணவனாக அட்மிஷன் கொடுக்கப்பட்டுள்ள சம்பவம் அனைவரையும் ஆச்சர்யத்திலும் அதிர்ச்சியிலும் ஆழ்த்தியுள்ளது.

5ம் வகுப்பில் படிக்கும் மாணவர்களுக்கான தேர்வு முடிவுகளில், ‘லட்டு கோபால் ஜி’ என்பவருக்கு அனைத்து பாடங்களிலும் முழு மதிப்பெண் 500/500 வந்திருப்பது இது தொடர்பான விவாதங்களை மேலும் அதிகரிக்கச் செய்துள்ளது.

ஆனால் உண்மையில் இது ஒரு மாணவனல்ல, லட்டு கோபால் என்ற குழந்தை வடிவ சாமி சிலை என்பது தெரிய வந்ததும் அனைவரும் அதிர்ந்தனர். இந்த லட்டு கோபால் சிலையை பள்ளியில் சேர்த்தவர், சிவான் கேட் பகுதியைச் சேர்ந்த டாக்டர் சஞ்சீவ் வசிஷ்ட். பல தலைமுறைகளாக அவரது குடும்பம் லட்டு கோபாலை தங்கள் குடும்ப உறுப்பினராக கருதி வழிபட்டு வருகின்றனர்.

குழந்தை வடிவ சிலையான லட்டு கோபாலுக்கு உண்மையிலேயே குழந்தை போலவே இடம் வழங்க வேண்டும் என்ற எண்ணத்தில், சஞ்சீவ் அவரை பள்ளியில் சேர்க்க முயன்றார். பள்ளி நிர்வாகம் முதல் எதிர்த்த போதும், கல்வி அதிகாரியின் அனுமதியுடன், ஒரு ஏழை மாணவனை இலவசமாக சேர்ப்பதற்கான நிபந்தனையில் சாமி சிலைக்கும் மாணவனாக அனுமதி வழங்கப்பட்டது.

தற்போது வாரத்தில் மூன்று நாட்கள் லட்டு கோபால் சிலை வகுப்பறையில் மாணவர்களோடு அமர்ந்திருப்பதாகவும், பாடங்களை கவனிக்கிறதெனவும் பள்ளி நிர்வாகம் கூறுகிறது. மேலும், தேர்வுகளையும் பள்ளியே நடத்தி மதிப்பீடு செய்து வருகின்றது.

இந்த விசித்திர சம்பவம் சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியிருக்கிறது. சிலர் மத நம்பிக்கைக்கு மரியாதை என்று பாராட்டுகிறார்கள்; சிலர் கல்வியின் காமெடி என்றே விமர்சிக்கின்றனர்.