
உத்திர பிரதேச மாநிலத்தில் உள்ள ஜான்சியில் 23 வயது சட்டக் கல்லூரி மாணவியின் தற்கொலை விவகாரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இச்சம்பவம் குறித்து காவல்துறை தரப்பில் கூறப்பட்டதாவது, சட்டக் கல்லூரி மாணவி டேனிஷ் ஆரா. இவர் பல் மருத்துவ சிகிச்சைக்காக கடந்த 4 மாதங்களுக்கு முன்பு பல் மருத்துவர் ஆசாத்தை சந்தித்துள்ளார்.
அதன் பின் இருவரும் நெருங்கி பழகி வந்துள்ளனர். அந்தப் பழக்கம் காதலாக மாறி உள்ளது. ஆசாத், டேனிஸ் ஆராவை திருமணம் செய்து கொள்வதாக வாக்குறுதி அளித்துவிட்டு தற்போது வேறொரு பெண்ணை நிச்சயதார்த்தம் செய்துள்ளார். இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளான ஆரா தனது அறையில் உள்ள கண்ணாடியில் லிப்ஸ்டிக்கால்” I OUIT” என எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்துள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இச்சம்பவம் குறித்து ஆராவின் குடும்பத்தினர், ஆராவை திருமணம் செய்து கொள்வதாக கூறி ஆசாத் தனது வீட்டிற்கு அழைத்துச் சென்று துன்புறுத்தியதாகவும், திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றி வேறொரு பெண்ணை நிச்சயம் செய்ததால் ஆரா மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி தற்கொலை செய்துள்ளார் என தெரிவித்துள்ளனர். இதனை அடுத்து காவல்துறையினர் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து பல் மருத்துவர் ஆசாத்திடம் விசாரணை நடத்தி வருகின்றனர்