
விழுப்புரம் மாவட்டம் ஒட்டனந்தல் கிராமத்தில் ரத்தினவேல் முருகன் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் பங்குனி மாதத்தில் உத்திரத் திருவிழா 11 நாட்கள் பிரம்மாண்டமாக நடைபெறும். அதன்படி இந்த ஆண்டு உத்திரத் திருவிழா கடந்த பங்குனி 1 ம் தேதி கொடியேற்றத்துடன் ஆரம்பமான நிலையில் நேற்று 11 ம் நாள் விழா நடைபெற்றது. அப்போது முருகன் கோவிலில் உள்ள இடும்பன் சாமிக்கு கருவாடு சோறு படையல் வைத்து சிறப்பு பூஜை நடத்தப்பட்டது.
அதன் பின்னர் முதல் 9 நாள் பூஜையில் வைக்கப்பட்ட எலுமிச்சை பழங்கள் பக்தர்கள் மத்தியில் ஏலம் விடப்பட்டது. இந்த எலுமிச்சை பழத்தை வாங்கி வீட்டில் வைத்து வழிபட்டு வந்தால் நினைத்த காரியங்கள் நடக்கும் என்று கூறப்படுகிறது. அந்த எலுமிச்சை பழங்களை கிராமத்தின் நாட்டாமை புருஷோத்தமன் மர செருப்பின் மீது நின்று கொண்டு ஏலத்தை ஆரம்பித்தார். அதில் முதல் நாள் பழம் ரூ. 20 ஆயிரத்துக்கு ஏலம் போன நிலையில் அடுத்தடுத்த பழங்களை பக்தர்கள் போட்டி போட்டு வாங்கினர்.
அப்போது 2ம் நாள் பழம் ரூ. 3600 க்கும், 3ம் நாள் பழம் ரூ. 1400க்கும், 4ம் நாள் பழம் ரூ. 1100 க்கும், 5ம் நாள் பழம் ரூ.1,300 க்கும், 6ம் நாள் பழம் ரூ. 700க்கும், 7ம் நாள் பழம் ரூ1500 க்கும், 8ம் நாள் பழம் ரூ 1100 க்கும், 9ம் நாள் பழம் ரூ. 1700 க்கும் ஏலம் போனது. இதைத்தொடர்ந்து எலுமிச்சை பழங்களை ஏலம் எடுத்தவர்களுக்கு ஒரு உருண்டை கருவாடு சாதமும் வழங்கப்பட்டது. மேலும் இந்த திருவிழாவில் முதல் நாள் பழம் ரூ. 20 ஆயிரம் ரூபாய்க்கு ஏலம் போனது குறிப்பிடத்தக்கதாகும்