
நீலகிரி மாவட்டம் மேட்டுப்பாளையம் பகுதியில் ஆதிவாசி கிராமம் உள்ளது. அங்கு வசித்து வரும் ஆதிவாசி மக்கள் சிலர் அருகிலுள்ள காட்டுப்பகுதிக்கு நேற்று முன்தினம் சென்ற நிலையில் அங்கு மனித உடல் ஒன்று அழுகிப்போய் எலும்பு கூடாக கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இது தொடர்பாக அவர்கள் குன்னூர் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். அந்த தகவலின் படி வனத்துறையினர், காவல் துறையினருடன் வனப்பகுதிக்கு விரைந்து வந்தனர். அப்போது காட்டுப்பகுதியில் கிடந்த உடல் அழுகி யார் என்று அடையாளம் காண முடியாத அளவுக்கு எலும்பு கூடாக இருந்தது.
எனவே காவல் துறையினர் மருத்துவமனைக்கு எடுத்து செல்லாமல், காட்டிலேயே பிரேத பரிசோதனை செய்ய செய்ய முடிவு செய்தனர். அதன்படி மருத்துவர்கள் வரவழைக்கப்பட்டு பிரேத பரிசோதனை நடத்தப்பட்டது. அதில் இறந்தவர் ஆண் என்பது தெரிய வந்தது. இந்நிலையில் இறந்தவர் யார்? எந்த பகுதியை சேர்ந்தவர்? எப்படி இறந்தார்? என்று காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் பிரேத பரிசோதனையின் முடிவில்தான் உண்மை விவரங்கள் தெரியவரும் என்று காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.