
வேலூர் மாவட்டம் பெரிய ஏரியூர் கொல்லைமேட்டில் ஆஞ்சநேயர் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த திருக்கோவிலில் பங்குனி மாதம் பௌர்ணமி நாளில் திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த வருடம் பங்குனி மாதத்தில் திருவிழா நடைபெற்ற நிலையில் ஏராளமான பக்தர்கள் காப்பு கட்டி விரதமிருந்து கலந்து கொண்டனர். அப்போது திருவிழாவில் 108 பால்குடங்கள் ஊர்வலமாக சென்றது.
இந்த ஊர்வலம் முத்துக்குமரன் மலையிலிருந்து தொடங்கிய நிலையில் பக்தர்கள் பால் குடங்களை சுமந்தபடி ஆஞ்சநேயர் கோவிலுக்கு வந்தனர். அந்த ஊர்வலத்தில் சில பக்தர்கள் அருள் வந்து சாமி ஆடிய போது ஒரு நபர் மரத்தில் ஏறினார். பின்னர் மரம் விட்டு மரம் தாவி பக்தர்களுக்கு அருள் வாக்கு கூறினார். அதோடு ஊர்வலத்தில் பால் குடங்களை சுமந்து வந்த பல பெண்களும் வெயிலில் சாமியாடியபடி சென்றனர்.
இந்த ஊர்வலம் கோயிலை சென்றடைந்த நிலையில் 108 பால்குடங்களும் ஆஞ்சநேயருக்கு பாலாபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது. இதைத் தொடர்ந்து கோயிலுக்கு தரிசனத்திற்காக வந்திருந்த அனைத்து பக்தர்களுக்கும் கோயில் நிர்வாகம் மோர் மற்றும் அன்னதானம் வழங்கி சிறப்பித்தது. குறிப்பாக இந்த கோவிலில் உள்ள ஒரு மரத்தில் குழந்தை வரம், திருமண பாக்கியம் வேண்டி ஏராளமானோர் மஞ்சள் கயிறு கட்டி வருவது பாரம்பரியமாக நடந்து வருவதாக அப்பகுதி மக்கள் கூறினர்.
மேலும் இந்த திருவிழாவில் அருள் வந்து சாமி ஆடிய நபர் மரம் விட்டு மரம் தாவி பக்தர்களுக்கு அருள் வாக்கு கூறியது அங்கிருந்த பக்தர்கள் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது குறிப்பிடத்தக்கதாகும்.