
இங்கிலாந்தில் சரே மாநிலத்தில் வசித்து வருபவர் வெனஷா பிரவுன். இவர் அப்பகுதியில் உள்ள பள்ளியில் வரலாற்று துறை ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் தனது மகள்கள் கல்வியில் கவனம் செலுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் அவர்களுடைய ஐபேடுகளை தற்காலிகமாக எடுத்து வைத்துள்ளார்.
கடந்த மார்ச் மாதம் 26 ஆம் தேதி அன்று ஒரு 40 வயது நபர் ஐபேடுகள் திருடப்பட்டதாக காவல்துறையில் புகார் அளித்துள்ளார். இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் ஹோப்ஹாமில் உள்ள வெனசாவின் தாயார் வீட்டிற்கு சென்று ஐபேடுகளை கண்டறிந்தனர்.
அதன் பின்னர் வெனசா பிரவுன் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். அதன் பின்னர் நடைபெற்ற விசாரணையில் வெனசாவிடம் கைரேகை எடுக்கப்பட்டதுடன், புகைப்படம் எடுத்து சோதனை செய்யப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 7 மணி நேரம் காவல் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்தார். இதே நேரத்தில் காவல் துறையினர் வெனஷாவின் மகள்கள் பள்ளிக்கூடத்திற்கு சென்று வகுப்பில் இருந்த மகள்களை அழைத்து விசாரணை மேற்கொண்டனர்.
அதன் பின்னர் இந்த வழக்கு நீதிமன்றத்தின் கீழ் வந்தது. அங்கு அந்த ஐபேடுகள் வெனசாவின் பிள்ளைகளுக்கு சொந்தமானவை. ஒரு தாய் தனது பிள்ளைகளிடமிருந்து பொருட்களை எடுக்க உரிமை உள்ளவர் எனவும் உறுதி செய்யப்பட்ட பின் இந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.
ஆனால் இந்த சம்பவம் வெனசாவுக்கு மிகவும் மன அழுத்தத்தை ஏற்படுத்தியதாகவும், தனது மகள்களிடம் விசாரித்தது மன உளைச்சலை ஏற்படுத்தியதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் தனது வீட்டு அருகில் பல்வேறு திருட்டுக்கள் மற்றும் வன்முறை சம்பவங்கள் நடைபெற்ற போது காவல்துறையினர் வாரக்கணக்கில் அது குறித்து நடவடிக்கை எடுக்க மாட்டார்கள் ஆனால் இந்த சிறிய குற்றத்திற்காக ஒரு மணி நேரத்திற்குள் என்னை கைது செய்ய இரண்டு காவல் அதிகாரிகள் அனுப்பப்பட்டுள்ளனர். இது தவறாக கையாளப்பட்ட ஒரு சம்பவம் என கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.