தேனி மாவட்டம் சின்னமனூர் பகுதியை சேர்ந்த தொழிலாளிக்கு 40 வயது ஆகிறது. கடந்த 2024-ம் ஆண்டு நவம்பர் மாதம் இவருக்கு திருமணம் நடைபெற்றது. அவர் திருமணம் செய்த பெண்ணுக்கு ஏற்கனவே இரண்டு திருமணம் நடந்துள்ளது. இரண்டு கணவர்களும் இறந்துவிட்டதாக கூறப்பட்டது.

அந்த பெண்ணை தொழிலாளி ஏற்றுக்கொண்டு திருமணம் நடத்தி வந்தார். திருமணத்தின் போது வயிறு பெரிதாக இருப்பது தொடர்பாக மாப்பிள்ளை கேட்டுள்ளார். அப்போது தனக்கு தொப்பை இருப்பதாக பெண் கூறியுள்ளார்.

சில மாதங்கள் சென்ற பிறகு வயிறு மேலும் பெரிதாகியதால் தொழிலாளி தனது மனைவியை மருத்துவமனைக்கு அழைத்து சென்று ஸ்கேன் பரிசோதனை செய்துள்ளார். அப்போது அவர் நிறைமாத கர்ப்பிணியாக இருப்பது தெரியவந்தது. இதை கேட்டு அதிர்ச்சியடைந்த தொழிலாளி பெருந்தன்மையாக தனது மனைவியை ஏற்றுக்கொண்டு குடும்பம் நடத்தி வந்தார்.

கடந்த மாதம் அந்த பெண்ணுக்கு ஆண் குழந்தை பிறந்தது. ஒரு நாள் அந்த பெண் தனது குழந்தையை கணவரிடம் ஒப்படைத்துவிட்டு பிரசவத்தின் போது போடப்பட்ட தையலை பிரித்து விட்டு வருவதாக கூறி சென்றார். ஆனால் நீண்ட நேரம் ஆகியும் அந்த பெண் வீட்டிற்கு வரவில்லை.

பல இடங்களில் தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. இதுகுறித்து தொழிலாளி சின்னமனூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார் அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியதில் அந்த பெண் ஒரு காப்பகத்தில் இருப்பது தெரியவந்தது.

அங்கு சென்று போலீசார் அந்த பெண்ணிடம் விசாரணை நடத்தினர். அப்போது வீட்டில் இருந்து வெளியேறிய பெண் வேறு ஒரு காவல் நிலையத்திற்கு சென்று தனது குழந்தையை தன்னிடம் பெற்றுக் கொடுக்குமாறு முறையிட்டுள்ளார்.

உடனே போலீசார் அறிவுரை கூறிய அந்த பெண்ணை காப்பகத்தில் சேர்த்து விட்டுள்ளனர். தனக்கு கணவருடன் வாழ விருப்பமில்லை குழந்தையை மட்டும் பெற்றுத் தாருங்கள் என அந்த பெண் கூறியுள்ளார்.

அவரது விருப்பத்திற்கு இணங்க கணவரிடம் இருந்து குழந்தையை பெற்று அந்த பெண்ணிடம் போலீசார் ஒப்படைத்தனர். இதனையடுத்து தொழிலாளி அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.