
ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள தெய்வதானம் கிராமத்தில் 15 வயதுடைய பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவன் வசித்து வந்துள்ளான். இந்த மாணவன் வளநாடு அரசு உயர்நிலைப் பள்ளியில் படித்து வந்த நிலையில் ஒரு மாணவியை ஒருதலையாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த மாணவன் ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்தவராக இருக்கும் நிலையில் பெற்றோர் கூலி வேலைக்கு சென்றுள்ளனர். தாங்கள் படிக்காவிடிலும் மகனாவது நன்றாக படித்து முன்னேற வேண்டும் என்று அவர்கள் மிகுந்த கனவோடு இருந்த நிலையில் பத்தாம் வகுப்பு தேர்வில் நல்ல மதிப்பெண் வாங்க வேண்டும் என்று தங்கள் மகனை அவ்வப்போது ஊக்கப்படுத்தி வந்தனர். அந்த மாணவனும் கடுமையாக படித்து வந்த நிலையில் இன்று இறுதி தேர்வு நடைபெற இருந்தது.
கடந்த சில மாதங்களாகவே மாணவனின் நடவடிக்கைகளில் மாற்றம் இருந்ததால் பெற்றோர் அது குறித்து கேட்டபோது ஒன்றும் இல்லை என்று கூறி சமாளித்து விட்டான். பின்னர் அக்கம் பக்கத்தினர் ஒரு சிறுமியிடம் பழகுவதாக அந்த மாணவனின் பெற்றோரிடம் கூறிய நிலையில் அவர்கள் முதலில் நம்ப மறுத்தனர். ஆனால் அவர்கள் அதனை தங்கள் கண்கூட பார்த்ததால் பின்னர் தங்கள் மகனை கண்டித்துள்ளனர். அதே சமயத்தில் தேர்வு நடந்து வருவதால் மிகவும் பக்குவமாக மாணவனுக்கு பெற்றோர் அதை புரிய வைக்க முயற்சி செய்தனர். ஆனால் அதனை மாணவன் கண்டு கொள்ளாத நிலையில் சம்பந்தப்பட்ட சிறுமி அந்த மாணவனை காதலிக்கவே இல்லை. அந்த மாணவன் மட்டும் தான் ஒருதலையாக அந்த சிறுமியை காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று இரவு மாணவன் தன் பெற்றோருடன் அமர்ந்து சாப்பிட்ட நிலையில் பின்னர் ஒரு தனி அறையில் படிப்பதற்காக செல்கிறேன் என்று கூறி கதவை பூட்டி விட்டான்.
இன்று காலை மாணவன் நீண்ட நேரம் ஆக வெளியே வராததால் கதவை தட்டினர். ஆனால் மாணவன் கதவை திறக்காததால் பெற்றோர் அக்கம் பக்கத்தினர் உதவியோடு கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்று பார்த்தனர். அப்போது மாணவன் தூக்கில் பிணமாக தொங்கினான். இது தொடர்பாக போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில் அவர்கள் வழக்கு பதிவு செய்து மாணவனின் சடலத்தை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மாணவனின் பெற்றோர் தங்கள் மகனை பிரிந்து கதறி துடிக்கிறார்கள். மேலும் இன்று இறுதி தேர்வை எழுத வேண்டியவன் இறுதி ஊர்வலமாக சென்றது அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.