சென்னை திருவான்மியூரில் 26 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். இவர் கடந்த ஏப்ரல் 5ம் தேதி வேலை முடிந்த பின் வீட்டிற்கு செல்வதற்காக சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே ராபிடோ பைக் டாக்சி ஓட்டுநர் ஒருவர் அவருடைய வண்டியில் வந்து கொண்டிருந்தார். அவர் திடீரென சாலையின் ஓரமாக நடந்து சென்ற அந்தப் பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார்.

அதனால் பதட்டமடைந்த அந்தப் பெண் சத்தமிட்டுக்கொண்டே அவரை பிடிக்க முயன்றார். ஆனால் பெண்ணின் சத்தத்தை கேட்டு அருகிலிருந்தவர்கள் ஓடிவந்த நிலையில் ஒட்டுநர் அந்த இடத்தில் இருந்து தப்பி சென்றார். பின்னர் இது தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் படி காவல்துறையினர் சம்பவ இடத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து ரேபிடோ பைக் டாக்சி ஓட்டுனரை தேடி வந்தனர். இந்நிலையில் ரேபிடோ நிறுவனத்தின் உதவியால் அவர் வெட்டுவாங்கேணி கற்பக விநாயகர் நகரை சேர்ந்தவர் என்பது தெரியவந்தது.

அவருடைய பெயர் திருமலை என்பதும் தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து காவல்துறையினர் அவரை கைது செய்ய அவருடைய வீட்டிற்கு சென்றனர். அப்போது காவல்துறையினர் வருவதை அறிந்த திருமலை தப்பிக்க முயற்சித்த போது தவறி விழுந்ததால் அவரது இடது கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது. மேலும் இது தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.