மதுரை மாவட்டம் நக்கலைப்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் செல்லாண்டி(55) என்பவர் இளநிலை எழுத்தராக வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த மாதம் வருடாந்திர தணிக்கை நடந்தபோது கடந்த 2022-ஆம் ஆண்டு முதல் போலியான நகைகளை அடகு வைத்து நகை கடன் வாங்கியதில் 35 லட்ச ரூபாய்க்கும் மேல் மோசடி நடந்தது தெரியவந்தது.

இதனையடுத்து சம்பந்தப்பட்ட கூட்டுறவு சங்கத்தினர் ஒன்றிணைந்து மோசடி செய்த பணத்தை செலுத்தவில்லை என்றால் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என கூறப்பட்டது. அந்த மோசடிக்கும் தனக்கும் சம்பந்தம் இல்லை. தன்னை தொடர்பு படுத்தி நடவடிக்கை எடுப்பதாக செல்லாண்டி மன உளைச்சலில் இருந்துள்ளார்.

அவர் நேற்று திடீரென தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று செல்லாண்டியின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.