உத்திரபிரதேசம் மாநிலம் மதுராவின் பார்சானாவில் உள்ள பிரபல ராதாராணி கோவிலில், பெண் பக்தர்களுக்கும் பாதுகாப்பு பணியில் இருந்த காவலர்களுக்கும் இடையில் ஏற்பட்ட மோதல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் ஏப்ரல் 12 ஆம் தேதி கோவிலுக்குள் நுழைந்த போது நடந்ததாக கூறப்படுகிறது. சமூக வலைத்தளங்களில் பரவும் வீடியோவில், சில பெண் பக்தர்கள் மற்றும் ஒரு பெண் பாதுகாவலர் இடையே தகராறு ஏற்படும் காட்சி தெளிவாக காணப்படுகிறது.

 

பெண் பாதுகாவலரை அந்த பக்தர்கள் தாக்க, இடையில் ஆண் பாதுகாப்பாளர்கள் களத்தில் இறங்கி அவர்களை பிரிப்பதற்குள், ஒரு பெண் தரையில் தள்ளப்படுகிறார். இந்த சம்பவம் கோவிலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இதுவரை எந்தவொரு அதிகாரப்பூர்வ புகாரும் போலீசாரிடம் அளிக்கப்படவில்லை. எனினும், சமூக வலைத்தளங்களில் இந்த வீடியோ வேகமாக பரவியதை அடுத்து, போலீசார் விசாரணை நடத்த உள்ளதாக அறிவித்துள்ளனர்.

சம்பவத்திற்குக் காரணமாக, பெண் பாதுகாவலர் சில பக்தர்களிடம் வேறு கதவிலிருந்து கோவிலுக்குள் நுழையக் கூறியதையே தகராறுக்கு காரணம் என்று கூறப்படுகிறது. போலீசார் தற்போது இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை செய்து வருகிறார்கள் என்றும், தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளனர்.