
குருகிராமில் உள்ள ஒரு பிரபல தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட 46 வயதுடைய ஏர்ஹோஸ்டஸுக்கு, வெண்டிலேட்டரில் இருக்கும்போது பாலியல் தொல்லை அளிக்கப்பட்டதாக பரபரப்பு புகார் ஒன்று வந்துள்ளது. கடந்த ஏப்ரல் 5ஆம் தேதி உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அந்த பெண், ஏப்ரல் 7ஆம் தேதி டிஸ்சார்ஜ் ஆன பின்னர் தனது கணவரிடம் இந்த கொடூர சம்பவத்தை பகிர்ந்துள்ளார். அதையடுத்து, அவர் போலீசில் புகார் அளித்துள்ளார்.
புகாரின் அடிப்படையில், மருத்துவமனையின் அடையாளம் தெரியாத ஊழியர்களுக்கு எதிராக குருகிராமைச் சேர்ந்த சாதர் போலீஸ் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. போலீசார் மருத்துவமனையின் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர். “உண்மையை உறுதி செய்யும் வகையில் பாதிக்கப்பட்டவரின் வாக்குமூலம் நீதிபதி முன்னிலையில் பதிவு செய்யப்பட்டுள்ளது. குற்றவாளி விரைவில் அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்படும்,” என்று குருகிராம் போலீசார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் மருத்துவமனையின் பாதுகாப்பு குறித்து கவலையை ஏற்படுத்தியுள்ளது. மேலும் மருத்துவமனையில் உள்ள ஊழியர் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்தபோது மயக்க நிலையில் இருந்ததால் தன்னால் எதுவும் செய்ய முடியவில்லை எனவும் அந்த சமயத்தில் 2 பெண் செவிலியர்கள் அருகில் இருந்ததாகவும் அந்த பெண் வேதனையோடு தன் புகாரில் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.