சீனாவின் ஜியாங்சு மாகாணத்தில் உள்ள சாங்ஜோவ் பாரம்பரிய மருத்துவமனையருகே செயல்பட்டு வந்த “ஆண்டி கஞ்சி ஸ்நாக் ஷாப்” என்ற கடை, மனித நஞ்சுக்கொடி (பிளாசென்டா) வை (afterbirth) தூளாக்கி ஜின்செங் போன்ற மூலிகைகளுடன் கலந்து ஆரோக்கியத்தை உயர்த்தும் காப்ஸூலாக மாற்றி விற்பனை செய்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கான விளம்பரங்கள், கடையின் பெயர்ப்பலகைகளில் “Placenta Processing” என தெளிவாக குறிப்பிடப்பட்டிருந்ததை சமூக வலைதள பயனாளிகள் புகைப்படம் எடுத்து பகிர்ந்ததோடு, ஒருவரது புகார் அடிப்படையில் இது அதிகாரப்பூர்வ விசாரணைக்கு உள்ளாகியுள்ளது.

 

சுகாதாரத்துறையின் விசாரணையிலே, இந்த உணவகம் நஞ்சுக்கொடியை (பிளாசென்டாவை) வாடிக்கையாளர்களிடம் இருந்து பெறுவதோடு, தாங்களே வழங்கினால் குறைந்த கட்டணத்தில் வழங்கப்படும் என்றும் தெரியவந்துள்ளது. சீன மரபு மருத்துவத்தில் பிளாசென்டாவுக்கு “ஜீஹேசே” (ziheche) எனும் பெயரில் சிகிச்சை மூலிகையாக நம்பிக்கை உள்ளதாக இருந்தாலும், 2015ஆம் ஆண்டு சீன மருந்தியல் பட்டியலில் இது நீக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் குறித்து சாங்ஜோவ் நகர சுகாதாரத் துறை கடையை தற்காலிகமாக மூடிவிட்டு, பிளாசென்டா வந்த வழிகள் சட்டப்படி தடை செய்யப்பட்டவை என்றும் தெரிவித்துள்ளது. “மனித உடலை உணவாகவும், பொருட்காட்சியாகவும் மாற்றும் பாரம்பரிய நம்பிக்கைகள் இப்போது அதீதமாக போய் விட்டன” என பலர் சமூக வலைதளங்களில் கண்டனம் தெரிவித்துள்ளனர். மேலும் நஞ்சுக்கொடி என்பது பிரசவமான ஒரு பெண்ணுக்கு குழந்தையுடன் வெளியே வரும்.

குழந்தை பிறந்த பிறகு அந்த நஞ்சு கொடியை டாக்டர்கள் அப்புறப்படுத்தி விடுவார்கள். இதைத்தான் இவர்கள் கேப்சூல் போன்ற மாற்றி உடலுக்கு ஆரோக்கியம் தரும் என்று கூறி விற்பனை செய்துள்ளனர்.