அமெரிக்கா நாட்டைச் சேர்ந்த விஞ்ஞானிகள், மனிதக் கண்களுக்கு இதுவரை தெரியாத ஒரு புதிய வண்ணத்தை ‘ஹோலோ’ என்ற பெயரில் கண்டுபிடித்துள்ளனர். மேம்பட்ட லேசர் மற்றும் கண் பார்வை கண்காணிப்பு தொழில்நுட்பத்தின் உதவியுடன், இந்த வண்ணத்தை ஐந்து பேருக்கு காட்டுவதில் அவர்கள் வெற்றி பெற்றுள்ளனர்.

ரெட்டினா பகுதியில் உள்ள செல்களை இயல்பை விட அதிகமாக தூண்டி வேலை செய்யவைத்ததன் மூலம், இந்த வண்ண அனுபவம் சாத்தியமாகியுள்ளது. ஹோலோ வண்ணம் “நீல-பச்சை கலந்தது போல” இருப்பதாக உணர்ந்தாலும், அதனை அவர்கள் சரியாக விவரிக்க முடியவில்லை.

இந்த வண்ணம் எந்த ஸ்கிரீனிலும், பொருளிலும் காட்ட முடியாது என பார்வை விஞ்ஞானி ஆஸ்டின் ரூர்டா தெரிவித்துள்ளார். இது போலி அனுபவமல்ல; உண்மையான ஒரு புதிய உணர்வாக இருந்தது என்றும் அவர் கூறினார். எனினும், இந்தக் கண்டுபிடிப்பில் சர்ச்சையும் எழுந்துள்ளது.

லண்டன் நகரைச் சேர்ந்த கண் மருத்துவர் ஜான் பார்பர் கூறுகையில், “இது புதிய வண்ணமல்ல. சாதாரண நிற வடிவமைப்பிலேயே உருவாகும் ஒரு அதிக செறிவுடைய பச்சை நிறம்தான்,” என விமர்சித்துள்ளார்.

பொதுமக்கள் இந்த வண்ணத்தை அனுபவிப்பது சாத்தியமல்ல என்றும், இது மனித பார்வை அறிவியலில் புதிய புரட்சி ஏற்படுத்தும் வகையில் முக்கியமான முன்னேற்றம் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.