
ஹரியானா மாநில ஹிஸார் மாவட்டத்திலுள்ள கவார் கிராமத்தைச் சேர்ந்த விவசாய சகோதரர்களான ராஜேஷ் மற்றும் அமர் சிங் புனியா ஆகிய இருவரும் தங்களது ஆறு பிள்ளைகளுக்கும் ஒரே இடத்தில் இரண்டு நாட்களில் திருமணம் நடத்தி பாராட்டுகளை பெற்றுள்ளனர்.
ஏப்ரல் 18 மற்றும் 19 ஆகிய நாட்களில், முதலில் இரு மகன்களின் திருமணமும், பின்னர் நான்கு மகள்களின் திருமணமும் நடைபெற்றது. இது மட்டும் இல்லாமல், அவர்கள் ஒரே அழைப்பிதழை தயாரித்து, ஒரே இடத்தில் அனைத்து விழாக்களையும் ஒருங்கிணைத்தனர்.
அனைத்து விழாக்களும் ஒரே மண்டபத்தில் நடைபெற்றதால், உணவு, அலங்காரம், ஒளியமைப்பு மற்றும் போக்குவரத்து ஆகியவை அனைத்தும் ஒரே நேரத்தில் ஒரே ஏற்பாடுகளில் முடிக்கப்பட்டன. இதில் பல லட்சம் செலவுகள் தடுக்கப்பட்டதாக குடும்பம் கூறியுள்ளது.
“ஒவ்வொரு திருமணத்தையும் தனித்தனியாக நடத்தினால் செலவு மற்றும் சிக்கல் அதிகம் ஆகும். ஆனால் ஒரே நேரத்தில் ஆறையும் நடத்துவதால் எல்லாம் எளிமையாக முடிந்தது,” என அமர் சிங் புனியா தெரிவித்துள்ளார்.
இது போன்ற எளிமையான, ஆனால் உறவுகள் நிறைந்த திருமண நிகழ்வு சமூக வலைதளங்களில் பெரும் வரவேற்பை பெற்றது. “திருமணம் என்பது குடும்பத்தை ஒன்றிணைக்கும் விழா. செலவுகளோடு பிரம்மாண்டமாக இல்லாமல், உணர்வோடு நடந்தால் அதுவே சிறந்தது,” என நெட்டிசன்கள் பாராட்டுகின்றனர்.
புனியா குடும்பம் ஒரே குடும்பமாக இணைந்து கொண்டாடிய இந்த விழா, மற்றவர்களுக்கு ஒரு விழிப்புணர்வு செய்தியாக இருக்கிறது.