சிங்கப்பூரில் உள்ள ஒரு குடியிருப்பில், திடீரென தரையில் பொருத்தப்பட்ட டைல்ஸ் வெடித்து எழும் அதிர்ச்சியான சம்பவம் இடம்பெற்றுள்ளது. வீட்டு நடுவில் பலத்த சத்தத்துடன் டைல்ஸ் பல துண்டுகளாக பிளந்து விழுந்த காட்சி, அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகப் பரவி வருகின்றன.

இதுகுறித்து வல்லுநர்கள் தெரிவித்ததாவது, இது போன்ற ‘டைல்ஸ் பாப்பிங்’ சம்பவங்கள் பெரும்பாலும் வெப்பநிலை அதிகரிப்பினால் ஏற்படுகின்றன. சிங்கப்பூரில் தற்போது அதிக வெப்பம் நிலவுவதால், கட்டடத்தின் உள்ளே வெப்ப பரவல் அதிகரிக்கிறது. இதன் காரணமாக, தரையில் பொருத்தப்பட்ட டைல்ஸ் விரிவடையும் போது இடைவெளி இல்லாமல் கச்சிதமாக பொருத்தப்பட்டிருந்தால், அழுத்தத்தை தாங்க முடியாமல் பிளந்து வெளியேறும்.

 

தரைத்தடம் சரியாக சீராக்கப்படாமல் டைல்ஸ் பொருத்தப்பட்டிருப்பதும், சிமெண்ட் கலவையின் ஒப்பான பரவல் இல்லாததும் இந்த பாப்பிங் நிகழ்வுக்கு இன்னொரு முக்கிய காரணமாக இருக்கலாம் என நிபுணர்கள் கூறுகின்றனர். சில கட்டிட பணியாளர்கள் கட்டிடங்களை விரைவில் முடிக்க முயற்சி செய்யும்போது, டைல்ஸ் பொருத்தும் பணிகளில் துல்லியத்தைக் குறைப்பது இந்தப்போன்ற அபாயங்களை ஏற்படுத்துகிறது.

இந்த சம்பவம் தொடர்பாக கட்டிட மேலாண்மைத் துறையினர், குடியிருப்பாளர்களை எச்சரித்து, டைல்ஸ் வெடிக்கும் சத்தம் அல்லது அசாதாரண அசைவுகள் தென்பட்டவுடன், உடனடியாக அந்த பகுதியில் நுழைய வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளனர். மேலும், பழைய கட்டிடங்களில் இந்த நிகழ்வுகள் ஏற்படும் வாய்ப்பு அதிகமாக இருப்பதால், முறையான பராமரிப்பு மற்றும் தொழில்நுட்ப மதிப்பீடு அவசியம் என்று வலியுறுத்தப்பட்டிருக்கிறது.