ஜம்மு & காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்குப் பின்னர், ஸ்ரீநகரில் இருந்து வெளியேற விரும்பும் பயணிகள் எண்ணிக்கை திடீரென உயர்ந்தது. இதன் காரணமாக விமானக் கட்டணங்கள் தாறுமாறாக உயர்ந்தன. ஒரு சில வழிகளில் டெல்லிக்கு ஒருவழி பறப்புகளுக்கே ₹65,000 வரை கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இதனால் பயணிகள் சமூக வலைதளங்களில் புகார்களை பதிவு செய்து வந்தனர். இந்த சூழ்நிலையில், மத்திய விமான போக்குவரத்து துறை தலையீடு செய்து, கட்டணங்களை இயல்புநிலைக்கு கொண்டு வரவும், கூடுதல் விமானங்கள் இயக்கவும் ஏர்லைன்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

அதன்படி, ஏர்இண்டியா, இன்டிகோ, அகாசா ஏர், ஏர்இண்டியா எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் ஸ்ரிநகரில் இருந்து டெல்லி, மும்பை உள்ளிட்ட இடங்களுக்கு சிறப்பு விமானங்களை இயக்கத் தொடங்கியுள்ளன. மேலும், ஏப்ரல் 30 வரை பயணிக்க உள்ளவர்களுக்கு ரத்துசெய்தல் மற்றும் மாற்றங்களை கட்டணமின்றி செய்யும் சலுகை வழங்கப்படுகிறது. விமானங்கள் மட்டும் இல்லாமல், உயிரிழந்த பயணிகளின் உடலை மாநிலங்களுக்கு கொண்டு செல்லும் பணிகளிலும் விமான நிறுவனங்கள் மாநில ஆட்சி அமைப்புகளுடன் இணைந்து முழு ஒத்துழைப்பும் அளிக்கின்றன. இது ஸ்ரிநகரில் தங்கியுள்ள பயணிகள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு ஒரு மிகப்பெரிய நிம்மதியாக அமைந்துள்ளது.