
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டை சேர்ந்தவர் பிரவீன் குமார். இவர் தனது 28 வயது தோழியுடன் ராசிபுரம் புதிய பேருந்து நிலையத்தில் பேருந்துக்காக காத்துக் கொண்டிருந்தார். அப்போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
ஒரு கட்டத்தில் இருவரும் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். கோபத்தில் பிரவீன் குமார் அந்த பெண்ணை சரமாரியாக தாக்கினார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் பிரவீன் குமாரை பிடித்து தர்ம அடி கொடுத்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
அதன்படி சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பிரவீன் குமாரை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். மேலும் படுகாயமடைந்த பெண்ணை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
இதுகுறித்து அந்தப் பெண் கூறும்போது, எனக்கு திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். கணவரை பிரிந்து வசிக்கும் நான் விவாகரத்து கேட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தேன். கடந்த சில மாதங்களாக பிரவீன் குமார் என்னுடன் நட்பாக பழகுகிறார்.
என்னை திருமணம் செய்வதாக பிரவீன் குமார் கூறினார். எனது நகைகளையும் கேட்டு வாங்கிக் கொண்டு தற்போது வேறு ஒருவருடன் எனக்கு தொடர்பு இருப்பதாக சந்தேகப்பட்டு தாக்கினார் என வாக்குமூலம் அளித்துள்ளார். அதன் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.