
ஜம்மு & காஷ்மீரின் பஹல்காமில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் நாடெங்கிலும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. இதற்குப் பிறகு, முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ஸ்ரீவத்ஸ் கோஸ்வாமி, இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் தொடர்புகளை முற்றிலும் துண்டிக்க வேண்டும் என BCCI-யை வலியுறுத்தி தனது X பக்கத்தில் கடுமையான கருத்தை பதிவிட்டுள்ளார். “மனித உயிர்களை கொன்றுவிட்டு, கிரிக்கெட்டில் நட்பு பாராட்ட முடியாது. கிரிக்கெட் அல்ல, கடுமையான பதில்தான் நியாயமானது” என அவர் தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் பஹல்காமுக்குச் சென்ற அனுபவத்தை நினைவுபடுத்திய அவர், “அங்கு மீண்டும் அமைதி பிறக்க தொடங்கியது போலத் தோன்றியது. ஆனால் இப்போது அந்த அமைதி இரத்தத்தில் கலைந்துவிட்டது” என புலம்பினார். இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் 2013-ம் ஆண்டு பிறகு இருதரப்பு தொடர் ஆடவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. ICC போட்டிகளில் மட்டுமே மோதிவரும் இவ்விரு அணிகளுக்கிடையில் எதிர்கால தொடர்புகள் குறித்து தற்போது அரசியல் மற்றும் விளையாட்டு துறையில் புதிய விவாதங்கள் எழுந்துள்ளன.