ஜம்மு-காஷ்மீரின் பெஹல்காமில் பயங்கரவாத தாக்குதலில் வீர மரணமடைந்த குதிரை சவாரி தொழிலாளி சையத் அடில் ஹூசேன் ஷாவின் தியாகம் தற்போது நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சுற்றுலாப் பயணிகளை காப்பாற்ற முனைந்த ஹூசேன், தனது உயிரையே கொடுத்துள்ளார். பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டின் போது, தன்னிடம் இருந்த குதிரையுடன் பயணிகளை பாதுகாப்பாக வெளியேற்ற முயன்ற ஹூசேன், பயங்கரவாதியிடம் இருந்த துப்பாக்கியை பறிக்க முயன்ற போது சுட்டுக் கொல்லப்பட்டார்.

முன்னதாக 2 வெளிநாட்டவர்கள் உள்பட 27 பேர் கொல்லப்பட்ட இந்த தாக்குதல், நாட்டையே பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இதனைத் தொடர்ந்து, ஹூசேன் ஷாவின் வீரச் செயல்கள் பற்றி அவரது குடும்பத்தினர் வலியோடு கூறினர்.

ஹூசேன் தாய் கூறும் போது, “என் மகன் பயணிகளை காப்பாற்ற முயன்றபடியே சென்றான். ஆனால் அவர் உயிருடன் திரும்பவில்லை,” என அழுதபடியே கூறினார்.

தந்தை ஹைதர் ஷா கூறுகையில், “அவன் தொலைபேசி அணைக்கப்பட்டிருப்பதை பார்த்ததும் உள்ளத்தில் ஏதேதோ யோசனைகள்  வந்தன. அதே நேரத்தில் காவல்நிலையத்திற்குச் சென்று தகவல் பெற்ற போது எங்கள் வாழ்க்கையே குழம்பியது,” என்றார்.

ஹூசேன் ஷாவின் இழப்பால்பெஹல்காம் முழுவதும் அதிர்ச்சியில் மூழ்கியுள்ளது. அவருடைய மனைவி மற்றும் குழந்தைகள் எதிர்காலம் குறித்து குழம்பி நிற்கிறார்கள்.

அரசாங்கத்திடம் ஆதரவும், நேர்மையான விசாரணையும் நடக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பில் அந்தக் குடும்பம் உள்ளது. அவருடைய வீரத்திற்கான மரியாதையாக அரசு வேலை, உரிய நிவாரணம், நினைவேந்தல் போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என மக்கள் வலியுறுத்துகின்றனர்.