
திருநெல்வேலி மாவட்டம் பத்தமடை பகுதியை சேர்ந்தவர் பிச்சையா. இவரது மகள் இசக்கியம்மாள்(எ)உஷா. இவருக்கு கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் ஆனது. கணவர் பழனிநாதன் கூலி வேலை பார்த்து வந்தார்.
கடந்த நான்கு வருடங்களுக்கு முன்பு இசக்கியம்மாள்- பழனிநாதன் தம்பதிக்கு ஒரே பிரசவத்தில் இரண்டு ஆண் குழந்தை மற்றும் இரண்டு பெண் குழந்தைகள் பிறந்தது. பழனிநாதன் கூலி வேலை பார்த்தே குடும்பத்தை நடத்தி வந்தார். ஆனால் ஒரு விபத்தில் சிக்கியதால் பழனிக்கு மனநிலை பாதிக்கப்பட்டது.
அதனால் உஷா நான்கு குழந்தைகளையும் வளர்ப்பதற்கு மிகவும் சிரமப்பட்டார். இந்த நிலையில் ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர் கூட்டத்தில் உஷா மனு அளித்துள்ளார். அந்த மனுவில் அவர் கூறியதாவது மனநிலை பாதிக்கப்பட்ட என்னுடைய கணவரால் வேலைக்கு செல்ல முடியவில்லை.
அதனால் 4 பிள்ளைகளை வளர்ப்பதற்கு மிகவும் சிரமமாக உள்ளது. எனவே சத்துணவு அல்லது அங்கன்வாடி உதவியாளர் பணி வழங்கி எங்களுடைய வாழ்வாதாரத்திற்கு உதவுமாறு மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார்.