
பீகார் மாநிலத்தில் உள்ள அஸ்ஸாம் நகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த மார்ச் 6ஆம் தேதி காலை மக்காச்சோளத் தோட்டத்தில் சிறுமியின் சடலம் ஒன்று கிடப்பதாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த தகவலின் படி விரைந்து வந்த காவல்துறையினர் சிறுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பியுள்ளனர்.
இதனை அடுத்து அப்பகுதியில் நடத்திய விசாரணையில், அந்த சிறுமி கடந்த மார்ச் 5ஆம் தேதி சோளத் தோட்டத்தில் புல் வெட்டுவதற்காக சென்றதாகவும், அதன் பின் அவர் வீடு திரும்பாததால் உறவினர்கள் அனைவரும் இரவு முழுவதும் அப்பகுதியில் தேடியதாகவும் கூறியுள்ளனர்.
இதனை அடுத்து மறுநாள் காலை சிறுமியின் உடல் சோளத்தோட்டத்தில் கண்டெடுக்கப்பட்டதாகவும் காவல்துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனை அடுத்து காவல்துறையினர் நடத்திய தீவிர விசாரணையில் பர்சோய் ரயில் நிலையம் அருகே ஒருவர் பதுங்கி இருப்பது தெரியவந்தது.
அந்த நபர் ரயிலில் தப்பியோட திட்டமிட்ட போது தகுந்த நேரத்தில் காவல் துறையினர் சென்று சுற்றி வளைத்து அவரை கைது செய்துள்ளனர். இதனை அடுத்து அவரிடம் நடத்திய விசாரணையில், அவர் பெயர் குலாம் ஹுசைன் என தெரியவந்தது. ஹுசைன் பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தையின் இரண்டாவது மனைவி மகன் என தெரியவந்தது.
அதன்பின், சிறுமியை புல் வெட்ட வந்த போது பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்ததாக குற்றத்தை ஹூசைன் ஒப்புக்கொண்டுள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேலும் அப்பகுதி மக்கள் குற்றவாளிக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.