
உத்தரபிரதேச மாநிலத்தின் பதாயூன் மாவட்டம், சதார் கோத்வாலி பகுதியில் குடும்ப உறவுகளை கேள்விக்குள்ளாக்கும் வகையில் நடந்த கொடூர சம்பவம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. தன் கணவர் வீட்டில் இல்லாத சமயத்தில், மாமனாராகிய பிரபுதயால், தனது மருமகளை பாலியல் வன்கொடுமை செய்ததாக பாதிக்கப்பட்ட பெண் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பாதிக்கப்பட்டவர் நேரடியாக நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில், சதார் கோத்வாலி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கடந்த 2015-ம் ஆண்டு ஜனவரி 23-ஆம் தேதி இரவு, அந்த பெண்ணின் கணவர் மருந்து வாங்க வெளியே சென்றிருந்தபோது, அவரது மாமனார் அறைக்குள் நுழைந்து மருமகளை வலுக்கட்டாயமாக பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியுள்ளார். கூச்சலிட்டு அழைத்ததால் குழந்தைகள் விழித்து எழுந்தனர். கணவர் வீட்டிற்கு வந்ததும், மாமனார் அந்த பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்ததோடு மாமியார் மற்றும் அவர மகள் ஆகியோரும் சேர்ந்து அந்த பெண்ணை தாக்கி அநாகரீகமாக பேசினதாகவும் குற்றச்சாட்டுகள் உள்ளன.
இது பற்றி பாதிக்கப்பட்டவர் கூறியதாவது, இவ்வழக்கில் முதலில் கோத்வாலி காவல் நிலையத்திலும், பின்னர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலரிடமும் புகார் அளித்தபோதும் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. அதனால் தான், நீதிமன்றத்தை நாட வேண்டிய நிலை ஏற்பட்டதாக கூறினார். தற்போது போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.